அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, December 18, 2012

உசன் உறவுகள் 2012

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கும் "உசன் உறவுகள் 2012" நிகழ்வு வருகின்ற January மாதம் 19ஆம் திகதி 2013ஆம் ஆண்டு சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 9116 Bayview Avenue, Richmond Hill, L4B 3M9, ON கனடாவில் அமைந்திருக்கும் SKL Banquet Hall இல் அனைவரையும் கவரும் வண்ணம் இந்த நிகழ்வு இடம்பெறும்.

சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், முதியோர் என்று அனைவரும் இந்த நிகழ்வில் விரும்பிக் கலந்து கொள்வது வழமை. இந்த முறையும் அநேகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் என்று முத்தமிழும் சங்கமிக்கும் ஒரு கலை நிகழ்வாக இது அமையும்.

வழமையாக December மாதத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு இம்முறை ஏன் January மாதத்தில் நடத்தப்படுகிறது என்று ஒன்றியத்தின் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனிடம் கேட்டபோது, "December மாதத்தில் வேலைத்தளங்கள் மற்றும் தனியார் ஒழுங்கு செய்யும் Christmas கொண்டாட்டங்கள் பல இடம்பெறுவதால் அநேகமானோருக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வசதிக் குறைவாக உள்ளது. தவிர December மாதத்தில் மண்டபம் பெற்றுக்கொள்வதும் சிரமமான ஒன்று. இதனால் பெரும்பாலானோரின் கருத்துக்களை உள்வாங்கி இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். இந்த முறை சிறப்பாக ஏதாவது உண்டா என்ற கேள்விக்கு, "இந்த நிகழ்வே ஒரு சிறப்புத்தான். அதற்குள் இன்னொரு சிறப்பும் உண்டு. ஆனால் அதையெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது" என்று பூடகம் போட்டார். "இந்த முறையாவது நிகழ்ச்சிகள் குறித்த நேரத்துக்கு ஆரம்பிக்குமா?" என்றொரு கேள்வியைத் தொடுத்தபோது, "அது எங்கள் கையில் இல்லை. பார்வையாளர்களின் கையில்தான் அது இருக்கிறது. இருந்தாலும் முடிந்தவரை குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க முயற்சிப்போம்" என்றார் அவர்.

"உசன் உறவுகள் 2012" நிகழ்வில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணமாக குடும்பம் ஒன்று $75.00உம், தம்பதிகளானால் $50.00உம், தனி நபர் $25.00உம் செலுத்தவேண்டும். தவிர இதுவரை வருடாந்த அங்கத்துவப் பணமாக குடும்பமொன்றுக்கு $20.00 செலுத்தி இதுவரை அங்கத்தவர்கள் ஆகாதவர்கள் இந்த நிகழ்வில் அதனைச் செலுத்தி அங்கத்தவராகுமாறு ஒன்றியத்தின் பொருளாளர் வெற்றிவேலு அஜந்தன் கேட்டுக்கொள்கிறார்.

இந்த நிகழ்வில் தரமான படைப்புக்களைத் தர விரும்பும் அங்கத்தவர்களும், இந்த நிகழ்வுக்கு அனுசரணை அளிக்க விரும்புபவர்களும் January 5ஆம் திகதிக்கு முன்பாக செயலாளரோடு தொடர்பு கொள்ளவும்.

"உசன் உறவுகள் 2012" இல் கலந்து சிறப்பிக்க கனடா வாழ் உசன் மக்களை மட்டுமல்ல வெளிநாடு வாழ் உசன் மக்களையும், மற்றும் சுற்றுக் கிராம மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.


Wednesday, December 12, 2012

உசனில் உருவாகும் .."முதியோர் நலன் காப்பகம்"


உசனில் காலம் காலமாய் வாழ்ந்த எமது முதியோர்களை அவர்களின் இயலாமைக்காலத்தில் போதிய அடிப்படை வசதிகளும், மருத்துவ, பொழுதுபோக்கு வசதிகளும் நிறைந்த பொதுவான காப்பகம் ஒன்றில் வைத்துப் பராமரிக்கும் தேவை குறித்து அறிந்து கொண்ட நோர்வேயில் வசிக்கும் உசனைச் சேர்ந்த திரு. அம்பலவாணர் ஜெயதேவன் (தேவன்) அவர்கள் தாமாக முன்வந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார் . இது குறித்து கடந்த சில மாதங்களாக கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் உட்பட வெளிநாடுகளிலும், உசனிலும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி அனைவரின் முழு ஆதரவையும் பெற்ற நிலையில் நேரடியாக உசனுக்கு சென்று கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த நிலையம் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்று எழுத்துமூலமான ஆவணங்களையும் அவர் கையளித்துள்ளார். அது மட்டுமன்றி இந்த முதியோர் நலன் காப்பகத்துக்குரிய ஆரம்பக் கட்டட நிதியைத் தான் பொறுப்பு எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இந்த நிலையத்துக்கான நிலத்தினை சமாதி மடம் பகுதியில் தருவதாக உறுதி பெறப்பட்டபோதும் இறுதி நேரத்தில் சில காரணங்களால் அது தடைப்பட்டுப்போனது. தற்போது இந்த பொது முயற்சிக்கு பலரும் ஆதரவு தரும் நிலையில் உசன் மத்திய பகுதியில் கட்டடம் அமைப்பதற்கான நிலம் (காணி ) தேவைப்படுகிறது. இவ்வாறு ஒரு பொதுவான முதியோர் காப்பகம் உசனுக்கு தேவையென பலரும் கருதுவதால் இதனை நிறைவேற்ற அனைவரும் முன்வருமாறு வேண்டுவதுடன் இதனை ஆரம்பித்தால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எமது இந்த முயற்சிக்கு உதவ முன்வருவதாக தெரிவித்துள்ளனர்.

அன்பான அனைத்துலக உசன் மக்களே இந்த நிலையத்தினை அமைக்க உசன் பகுதியில் காணி ஒன்று தேவைப்படுகிறது. எனவே நல்லுள்ளம் கொண்ட யாரவது முன்வந்து இந்த நற்பணி தொடர பங்களிக்குமாறு வேண்டுகிறோம். அது மட்டுமன்றி உங்களால் முடிந்த வரை உங்கள் பங்களிப்பையும் நாடி நிற்கிறோம்.
இந்தப் பணிக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கி இப்பணி நிறைவேற வாழ்த்துகிறது.

தொடர்புகளுக்கு:
தேவன் (நோர்வே) :+4796655555
பாஸ்கரன் (கனடா): +19056865078
நகுலன் (கனடா): +14166189549
சிவானந்தன் (உசன்): +94772877799
Dr. கணேஷ் (உசன்): +94777174446