அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

About USAN

ஊர் போற்றும் உசன்



ஈழத்திருநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடபகுதியின் மருதநிலத்தில் அமைந்துள்ள “உசன்” என்ற ஊரில் புலவர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள் மட்டுமன்றி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உழவுப் பெருமக்களும் இவ்வூரில் வாழ்கின்றனர். 

இவ்வாறு இவ்வழகிய கிராமத்தில் பிறந்து வாழ்ந்த எம்மக்கள் உசன் மண்ணில் மட்டுமல்லாது உலகின் எந்த மூலையிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  ஆர்வலர், அறிவாளர், அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என்றெல்லாம்உலகத்தின் எந்தச் சாலையிலும் எம்மக்கள் பணிபுரிகின்றனர். “அழகென்ற சொல்லுக்கு முருகன்” அவன் ஓர் அழகன். அவன் கந்தனாக உசனில் வீற்றிருந்து எம்மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றான். 



நம்மூரின் சாலையின் இருமருங்குகளிலும் நெற்கதிர்கள் அழகாய் நம்மூருக்கு அழகூட்டிக்கொண்டிருக்கின்றன. தென்னை மரங்கள் வேற்றுக்கிரக வானங்களைப்போல கண்களுக்குக் காட்சியளிக்கும். இதைப் பார்த்தால் உள்ளம் பூரிக்கும். சேர். பொன். இராமநாதன் பெயரைச்சொல்லும் “உசன் இராமநாதன் வித்தியாலயம்” நம்நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. எம்பாடசாலையில் உசன் மக்கள் மட்டுமன்றி மிருசுவில், பாலாவி, கெற்பலி, கரம்பகம், விடத்தற்பளை ஆகிய ஊர்மக்களும் கல்விகற்று வருகின்றனர்.




“இயற்கை அழகையும் அதை மனிதன் மாற்றியமைத்திருக்கும் நுட்பங்களையும் கலைக்கண்களோடு பார்த்து இரசித்தால் கவலையான சூழ்நிலைகள் மறந்துவிடும்” என்ற தத்துவத்துக்கிணங்க, உசனில் வீரத்துடன் வீற்றிருக்கும் வீரபத்திரனும், தெற்கே அமைதியாக வீற்றிருக்கும் கசகேணிப் பிள்ளையாரும் எம்மக்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாது, எமது உசன் மக்கள் பழைய பாரம்பரியங்களின் ஒன்றான விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றார்கள். வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று விருந்தினருக்கு அமுது படைத்து உச்சிகுளிரவைக்கும் பண்பு எமது உசன் மக்களிடையே காணப்படுகின்றது. இங்ஙனம் பெருமை சேர்த்த எம்மண்ணை நாமும் நேசிப்போமாக ... இவ்வண்ணம்,


விஜயகுமாரி புஸ்பராசா (BA)
ஆசிரியர் - இலங்கை / கனடா