அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்
Showing posts with label நன்றிகள். Show all posts
Showing posts with label நன்றிகள். Show all posts

Thursday, February 23, 2023

ஈச்சங்காடு இந்து மயானப் புனரமைப்பு


பாரெங்கும் பரந்து வாழும் பாசம் மிக்க உசன் உறவுகளே!
உங்கள் அனைவரினதும் உத்வேகத்தில் உதித்த உசன் பவுண்டேசனானது தனது முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்திட்டமான ஈச்சங்காடு இந்து மயான புனரமைப்புப் பணியை நிறைவுசெய்துள்ளது. இச் செயற்திட்டத்தினால் மயானத்தின் தகனபீடம் அடங்கிய எரிகொட்டகையைச் சுற்றி காப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மண் அணைத்து உயரமாக்கப்பட்டு, வெள்ள நீர் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர தீர்வு பெறப்பட்டுள்ளது. அத்துடன் இப் பிரதேசத்தில் நிழல்தரு மரங்கள் நாட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இது ஒரு பச்சையீட்டுச் செயற்திட்டமாக மிகச் சிறப்பாக அந்தச் சூழலுக்குப் பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச் செயற்திட்டமானது மக்கள் மயப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தோராய மதிப்பீடாக ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் எதிர்பார்க்கப்பட்டது. எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி, பொருட்கள், சேவைகளின் கட்டுக்கடங்காத பெறுமதியுயர்வு, பணவீக்கம் முதலான காரணங்களால் எமது தோராய மதிப்பீட்டினைத் தாண்டிய நிலையில் 1,172,801.00 ரூபா செலவீனம் ஏற்பட்டிருந்தது.
இச் செயற்திட்டத்திற்கான உள்ளுர்வாழ் உசன் உறவுகளது பங்களிப்பாக 672,050.00 ரூபா கிடைக்கப்பெற்றதுடன், தன்னார்வமாக புலம்பெயர் தேசத்து உறவுகள் மூவரது பங்களிப்பு 300,186.00 ரூபா இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.


நிதிப் பங்களிப்பானது தனியாக இச் செயற்திட்டத்தின் சரியான செலவீனத்தினை ஈடுசெய்வதற்காக மாத்திரமே மேற்கொள்வது எனவும், இதற்காகச் சேகரிக்கப்படும் நிதியை வேறு தேவைகளுக்குப் பாவிப்பதில்லை என்ற கொள்கைரீதியான தீர்மானத்தின் அடிப்படையிலும் தொடரப்பட்டது.
முதலில் உள்ளுர் மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது எனவும், இச் செயற்பாட்டில் உள்ளுர் மக்களது பங்கேற்பு “எமது” என்ற சிந்தனையை வலுவாக்கும் என்பதை அழுத்துவதாகவே அமைந்திருந்தது. இச் செயற்பாடு பெரு வெற்றியை எமக்கு அளித்திருக்கின்றது. எதிர்பார்க்காதவகையில் சிறப்பான பங்களிப்புடன் ஒரு தொகை உள்ளுரில் கிடைத்திருந்தது. தவிர தன்னார்வமாக இச் செயற்திட்ட பிரேரிப்பினை அறிந்தவர்களாக பொது வெளியில் நிதி திரட்டுகை ஆரம்பிக்கப்படாத நிலையில் மூவரது பங்களிப்புக்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றினை திரட்டியதன் அடிப்படையில் 200,565.00 ரூபா இன்னமும் திரட்டவேண்டிய நிலையில் எமது நிர்வாக குழு செயற்திட்ட நிறைவுச் செய்தியுடன் நிதிக் கோரிக்கையையும் பொது வெளியில் முன்வைக்கின்றது.


திரட்டப்படவேண்டிய தொகை 200,565.00 இலங்கை ரூபாக்கள்.
இத் தொகை மாத்திரமே இச் செயற்திட்டம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இதனைப் பங்களிக்க விரும்பும் நல் உள்ளங்கள் கீழ்வரும் எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதுடன், உங்களது விபரங்களை எமது usanfoundation@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கவும்.
Account name: Usan foundation society Limited
Bank: Nations Trust Bank
Branch: Jaffna Branch
Swift Code: NTBCLKLX
Account number: 200350097907


மேலும் இம் மயானத்தினை எமது கிராமத்தினை விடவும் தவசிகுளம் ஒருபகுதி, கெற்பேலி மற்றும் பாலாவியின் ஒரு பகுதி அயல் கிராமங்களும் பயன்படுத்துவதால் அவ் விடத்தினைப் பராமரிப்பு செய்வதில் பொது நிலைப்பாட்டினை உருவாக்குவதற்கான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் மயானம் எமது கிராமத்தின் பௌதீக எல்லைக்குள் அமைந்திருப்பதால் அதற்கான உரிமைத்தத்துவமும், தங்குதடையற்ற ஆட்சியும் எமது கிராம மக்களிடம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் மேற்குறித்த பயனர்களிடம் இருந்து எவ்வித பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் இச்செயற்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவீனப்பொழிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரதும் ஒத்துழைப்புக்கு உசன் பவுண்டேசன் சார்பாக மிக்க நன்றிகள்.
நிர்வாகக் குழு
USAN Foundation







Saturday, July 30, 2022

அன்பார்ந்த உறவுகளே!


கடந்த 2022.07.10 அன்று Neilson park இல் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடை கால ஒன்றுகூடலும், நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

அன்றைய தினம் வழமை போல் Roast பாண், சம்பல், வடை, தேநீர் போன்ற காலை உணவுடன் ஒன்றுகூடல் சிறப்பாக ஆரம்பமானது.

காலையிலேயே நிர்வாக சபை உறுப்பினர்கள் வந்திருந்து தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். முற்பகல் 11 மணியளவில் உசன் மக்கள் வந்து சேர ஆரம்பித்தார்கள்.  பிற்பகல் 1 மணியளவிலேயே பொதுக்கூட்டத்தை ஆரம்பிக்குமளவுக்கு மக்கள் வந்துசேர்ந்தார்கள்.

பொதுக்கூட்டம் பகல் 1 மணியளவில் ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக Norway ல் இருந்து வந்திருந்த திரு. திருமதி சபேசன் நல்லதம்பி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.  சிறப்பு விருந்தினராக இந்த வருட நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான Real Estate Agent & Mortgage Agent, திரு. திருமதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து மகிழ்வித்தார்கள்.  இவர்கள் மங்கல விளக்கையேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை ஆகியன சமர்ப்பிக்கப்பட்டு சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மிகவும் குறைவான மக்களே ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இருப்பதைக் கவலையோடு சுட்டிக்காட்டிய தலைவர் மேலும் அங்கத்தவர்களைச் சேர்த்துத் தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  அத்தோடு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா கடந்த 6 வருடங்களில் கிட்டத்தட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான சேவைகளைச் செய்து முடித்துள்ளதாக விபரங்களைத் தெரிவித்தார்.  அத்தோடு உசன் அபிவிருத்திக்காக உலகளாவிய உசன் கட்டமைப்புக்கு இதுவரை சேர்க்கப்பட்ட 30 இலட்சம் ரூபாவின் பெரும்பகுதி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவாலேயே சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து தற்போதைய நிர்வாகசபையின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகசபைத் தெரிவு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மதிய உணவாக Barbecue, குழைசாதம், pasta வுடன் இம்முறை விசேடமாக கீரைப்பிட்டும், அப்பமும் பரிமாறப்பட்டது. அனைத்து உணவு வகைகளையும் அனைவரும் இரசித்து உண்டார்கள் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து விளையாட்டுப் போட்டியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

மாலையில் கோப்பியும் cake ம் பரிமாறப்பட்டது. இறுதியில் எமது விசேட இரவு உணவான கொத்துரொட்டி அனவருக்கும் வழங்கப்பட்டது. 

இவ்வருடம் இதுவரை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் புதிதாக 5 உறுப்பினர்கள் மாதாந்த அங்கத்துவம் மூலம் இணைந்துள்ளார்கள். மேலும் மூவர் வருடாந்த சந்தாவான $120 ஐ செலுத்தித் தங்கள் அங்கத்துவத்தைப் புதுப்பித்துள்ளார்கள். புதிய அங்கத்தவர்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா இன்முகத்தோடு வரவேற்கிறது.

கணிசமான அளவு இளையவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டியது.  அத்தோடு விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் பிரதிநிகளும் கலந்துகொண்டு மதிப்பளித்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பலர் அனுசரணையும், அன்பளிப்பும் வழங்கியிருந்தார்கள்.
திரு. கேதீஸ்வரன் இராசையா (Trophies)
திருமதி சாந்தினி சிவானந்தன் (Lottery prize)
திருமதி ரஜனி மதீஸ்வரன் (Lottery prize) 
திரு. அந்தனி பொன்ராஜா (Mortgage Agent)
திரு. உதயகுமார் நடராஜா (தலைவர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. பிரதீபன் சண்முகநாதன் (பொருளாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா)
திரு. ஜெயக்குமார் சோமசுந்தரம் (உப செயலாளர், விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா) 
திரு. ஜீவராஜா பொன்னம்பலம் (ஜீவன், Niru Brand)
திரு. கருணானந்தன் வினாசித்தம்பி (JBN Auto) 
திரு. திருகரன் சின்னத்துரை

ஆதரவு நல்கிய அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஒளிப்படங்களைப் பார்ப்பதற்கு usanpeople என்ற FaceBook தளத்திற்குச் செல்லவும்.


Sunday, December 5, 2021

மதிப்பளிப்பு நிகழ்வு

உசன் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து உசன் கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியினை 21.11.2021 அன்று
யா/உசன் இராமநாதன் மகாவித்தியால மண்டபத்தில் மாலை 4 மணிக்கு திரு அ.கஜீவன் தலைமையில் நடாத்தியுள்ளனர்.
தென்மராட்சி மட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டி 2020 இல் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவும், உசன் கிராமத்துக்கு அவர் வழங்கி வரும் சிறப்பான சேவைக்காகவும் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நிர்வாக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம் தென்மராட்சி த.அருந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மழலைகளால் தேவாரம் இசைக்கப்பட்டதையடுத்து உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு சொல்வாக்குச் சித்தர் கேதீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசியுரை இடம்பெற்றது. செல்வன் மு. ஜதுர்ஸன் அவர்களால் உசன் கீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்புரையை செ. ஜதிகேசன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரை விழாத் தலைவர் அ.கஜீவன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து திரு.கு. கமலதாஸ், திரு.சு. சற்குணநாதன், திரு.இ. முருகதாஸ் மற்றும் வித்தியாலய முதல்வர் திரு சண்முகதாசன் ஆகியோரால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
தொடர்நது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வின் வாழ்த்துச் செய்தி அ. கஜானன் அவர்களால் சபையில் வாசிக்கப்பட்டது.
பிரதம விருந்தினர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மதிப்பளிப்பு இடம்பெற்றது. முன்னைநாள் கிராம உத்தியோகத்தரும், எமது கிராமத்தவருமாகிய சுசீலாவதி செல்வநாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்க, திருமதி சி. பிரபாகரன் மற்றும் திருமதி த.சிவகுமாரன் ஆகியோரால் மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
நினைவுச் சின்னம் பிரதம விருந்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம அலுவலர் அகல்யா வருண்ராஜ் அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
ந. ஜதுர்ஸன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் பலரும் கிராம அலுவலரை வாழ்த்தி கலந்துரையாடினர்.
வாழும்போதே வாழ்த்துவோம் என்ற கருப்பொருளுக்கமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது. உசன் கிராமமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தது ஒரு முன்மாதிரியாக அமைந்தது.































Friday, March 5, 2021

மனமார்ந்த நன்றி!


உசன் இராமநாதன் முன்பள்ளி கட்டிட நிதி உதவி வேண்டி உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா விடுத்த வேண்டுகோளை ஏற்று தமது பங்களிப்பை வழங்கியோர் விபரம்:

1. காலஞ்சென்றவர்களான திரு பெரியதம்பி பொன்னம்பலம் மற்றும் திருமதி புனிதவதி பொன்னம்பலம் நினைவாக - ரூ. 53,790.00
2. திரு சிவசுப்பிரமணியம் சிவானந்தன் குடும்பம் (ஆனந்தனண்ணை) - $500.00
3. திருமதி சரோஜினி தேவபாலன் குடும்பம் - $300.00
4. திரு கார்த்திகேசு சுகுணபாலயோகன் - $200.00
5. திரு நவரத்தினம் சிவகுமாரன் (ரவி, இத்தாலி) - $100.00
6. திரு கனகசுந்தரம் அச்சுதன் - $100.00
7.  Dr. இந்திரன் ஆசீர்வாதம் - $750.00
8.  Dr. வே. விபுலானந்தன் - $700.00
9. Dr. திருமதி பூமகள் தட்சணாமூர்த்தி - $500.00
10. திரு அகிலன் கனகசுந்தரம் (சுவிற்சர்லாந்து) - $100.00
11. சின்னத்துரை குடும்பம் - ரூ.1,02,690.00
12. திருமதி சரோஜினி இராமநாதர் - $200.00
13. திரு சஞ்சீவ் இராமநாதர் - $50.00
14. திருமதி விஜயகுமாரி புஷ்பராஜா - $100.00
15. பொன்னையா சற்குணநாதன் - $100.00
16. நல்லதம்பி பராசக்தி - $100.00
17. உதயகுமாரி தயாபரன்  - $100.00
18. ஜெயசங்கர் ரங்கநாதன்  - $100.00
19. திருஞானசோதி (Proctor ராஜரத்தினம் அவர்களின் மகன் திரு அண்ணை) நினைவாக திருமதி யோகா திருஞானசோதி - $150.00
20. முன்னாள் அதிபர், காலஞ்சென்ற சி. கணபதிப்பிள்ளை மற்றும் திருமதி கணபதிப்பிள்ளை, திரு ஸ்ரீராமநாதன் அவர்கள் நினைவாக ஜெகதாம்பிகை ஸ்ரீராமநாதன் (ராணி teacher) - $100.00
21. ரஜனி மதீஸ்வரன் - $100.00
22. தர்சினி சிவகணேசவேள் - $100.00
23. மகாரஞ்சிதம் கணேசன் - $100.00
24. கமலாதேவி (தேவி அக்கா) ஸ்கந்தகுமார் - $100.00
25. சங்கரப்பிள்ளை வேலுப்பிள்ளை மற்றும் சின்னத்தங்கம் வேலுப்பிள்ளை நினைவாக குடும்பத்தினர் - ரூ.53,790.00
26. ஜெனீவன் தெய்வேந்திரம் - $250.00
27. சிவகுமார் நவரத்தினம் - $200.00
28. ஞானதேவி ஸ்ரீகாந்தன் நினைவாக சுஜிதா ரஜீவ் - $130.00

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவால் ரூ.10,59,500/= உசன் இராமநாதன் முன்பள்ளி அபிவிருத்திக் குழு சார்பில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

தற்போதைய Covid-19 நிலைமை காரணமாக பொருளாதார நிலையில் தளர்ச்சியிருந்தபோதும், உசன் மண்மேல் கொண்ட பற்றுக் காரணமாக இரு கரங்களாலும் வாரி வழங்கிய அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. ரூ.10,00,000/= ஐ இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதி சேகரிப்பு உங்களின் அபரிமிதமான ஆதரவால் ரூ.30,00,000/= இற்கு சற்று மேல் சென்றுள்ளது. இது உசன் வரலாற்றில் ஒரு சாதனையாகும். உங்களின் நம்பிக்கை வீண்போகாது, சேகரிக்கப்பட்ட நிதி தற்போதைய தேவைக்கு பாவித்தது போக, மீதியை எதிர்காலத் தேவைகளுக்காக நிலையான வைப்புக்கணக்கில் வைப்பிலிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டம் குறித்த விபரங்கள் அவ்வப்போது உங்கள் முன் வைக்கப்படும்.

இந்த நிதிப் பங்களிப்பில் பங்குகொண்ட அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, January 17, 2021

நன்றி! நன்றி!! நன்றி!!!


"உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்திருப்பதை உங்களிடமிருந்து வரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும் பறைசாற்றி நிற்கின்றன. இப்படியான ஒரு நிகழ்வை வழங்க முடிந்ததையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.
Toronto நேரம் காலை 7 மணிக்கு இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று அறிவித்திருந்தபோதும், காலை 6:30 மணிக்கு இணைப்பை ஆரம்பித்தபோதே மக்கள் காத்திருந்தது நிகழ்வின் வெற்றியைக் கட்டியம் கூறியது. அந்த நேரத்தில் இணைந்தவர்கள் கலை நிகழ்வுகள் முடியும்வரை தொடர்ந்திருந்தது நிகழ்ச்சியின் தரத்தை எடுத்துக்கூறியது.
கிட்டத்தட்ட 158 இணைப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு இணைப்பில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குடும்பமாக நிகழ்ச்சிகளை பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தனர். New Zealand, Australia, Switzerland, France, Germany, Italy, Sweden, Denmark, Norway, UK, Sri Lanka, USA, Canada என்று 13 இற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நேர வித்தியாசத்தையும் கடந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்பே.
கலை நிகழ்ச்சிகள் அத்தனையும் மிகவும் சிறப்பாக இருந்தன. கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து உறவுகளோடு உரையாடல் ஆரம்பித்து மேலும் இரு மணித்தியாலங்கள் நீடித்தது. ஒருவரை ஒருவர் தேடித் தேடிக் கதைத்தார்கள். உள்ளத்தில் உறங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தன. பலர் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டனர். கண்கள் பனிக்க, இதயம் படபடக்க பிரிய மனமின்றிப் பலர் பிரிந்து சென்றனர்.
கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணமுள்ளனர். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவும் இந்தக் கலைஞர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜோதி ஜெயகுமாருக்குப் பாராட்டுகள் வந்து குவிந்தவண்ணமுள்ளன. நிகழ்ச்சிகளைச் சிறப்பாகவும், சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் அவர் தொகுத்தளித்தது நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.
"அந்தத் தம்பிக்கும் எங்கள் நன்றியையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவிடுங்கள்" என்று பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நிகழ்வுகள் தொய்வின்றி தொடர தொழில்நுட்பத்தில் கடுமையாக உழைத்த கீரனையே அவர்கள் "தம்பி" என்று உரிமையோடு அழைத்தனர்.
ஜோதிக்கும், கீரனுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தலை சாய்த்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மொத்தத்தில் "உசன் உறவுகள் - சர்வதேச இணைய விழா" வெற்றிகரமாக நடைபெற உதவிய அத்தனைபேருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியத் தெரிவித்து நிற்கிறது.


Wednesday, July 1, 2020

இடர்கால உதவித் திட்டத்தில் பங்கெடுத்தோருக்கு நன்றி


உசனில் மேற்கொள்ளப்பட்ட இடர் கால துயர் துடைப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் ரூ.1,28,000.00 உம்,  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ரூ.4,16,000.00 உம் நிதியாகச் சேர்த்தன.  இதில் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம் சேர்த்த நிதி கற்பிணிப் பெண்களுக்கும், அவர்களுடைய 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கும் சத்துணவு வழங்குவதற்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சேர்த்த நிதி, வருமானம் குறைந்த 177 குடும்பங்களைச் சேர்ந்த 576 குடும்ப உறுப்பினர்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக உறுதிச் சீட்டாக (voucher) வழங்கப்பட்டது.

இந்தத் உதவித் திட்டத்தில் பங்கெடுத்து நிதி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  தேவையறிந்து வழங்கப்பட்ட இந்த உதவி பயனாளிகளின் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பங்களித்தோர் விபரம்:

அச்சுதன் கனகசுந்தரம்

$100.00

பாஸ்கரன் சுப்பிரமணியம்

$100.00

ஜெகதீஸ்வரன் சிதம்பரம்பிள்ளை

$25.00

ஜெயசங்கர் இரங்கநாதன்

$100.00

பரம்சோதி வேலுப்பிள்ளை

$100.00

பிரபானந்தன் வெற்றிவேலு

$500.00

சஞ்சிகா சுபேசன்

$100.00

சரவணமுத்து குடும்பம்

$208.72

சரோஜினி தேவபாலன்

$50.00

சாந்தினி சிவானந்தன்

$100.00

சிவகுமார் நவரத்தினம்

$200.00

தயாபரன் சித்தம்பரப்பிள்ளை

$100.00

திசீவன் நவரத்தினம்

$50.00

வரதகுமார் சிதம்பரம்பிள்ளை

$100.00

வேனுசன் யோகராசா

$100.00

விஜயகுமாரி புஷ்பராஜா

$100.00

ரஜனி மதீஸ்வரன்

$100.00

செமிலா பிரகலாதன்

$100.00

சின்னத்துரை குடும்பம்

$300.00

திருமதி பொன்னம்பலம் நினைவாக

$100.00

புஸ்பராணி சிவபாதம்

ரூ.16,000.00

கணேசானந்தன் சரவணமுத்து

ரூ.50,000.00



கேதீஸ்வர சர்மா

ரூ.10,000.00

சரவணா ஐயா

ரூ.10,000.00

சோ. ஸ்ரீகாந்தன்

ரூ.10,000.00

. ஜெபநாமகனேசன்

ரூ.10,000.00

. ஜெயராஜா

ரூ.10,000.00

சே. சஞ்சயன்

ரூ.10,000.00

மீரா தேவரஞ்சன்

ரூ.10,000.00

இந்துஜா சாரங்கன்

ரூ.10,000.00

பே. அரவிந்தன்

ரூ.10,000.00

சு. சற்குருநாதன்

ரூ.10,000.00

கு. கமலதாசன்

ரூ.7,000.00

சு. அருடப்பிரகாசம்

ரூ.5,000.00

து. ரேஜன்

ரூ.5,000.00

பொ. கனகரத்தினம்

ரூ.5,000.00

. செல்வராசா

ரூ.5,000.00

முருகேசு

ரூ.1,000.00


நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, January 27, 2019

கனடா வாழ் உசன் உறவுகளின் குளிர்கால ஒன்றுகூடல் - “உசன் உறவுகள்”


சிறப்பாக நடைபெற்று முடிந்த “உசன் உறவுகள்” ஒன்றுகூடலுக்கு அணுசரணை வழங்கியவர்களிற்கும், தமது திறமைகளை வெளிப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தந்துதவியவர்களிற்கும், பல சிரமங்களின் மத்தியிலும் இந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்த உசன் உறவுகளிற்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி செய்த அனைத்து உறவுகளிற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன் இனிவரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளிற்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரதும் ஒத்துளைப்பை நாடி நிற்கின்றது.

இந் நிகழ்வின் ஒளிப் படத் தொகுப்பினை usanpeople  என்னும் எமது FaceBook பக்கத்தில் பார்க்கலாம்.

நன்றி
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Thursday, December 15, 2016

வாழும்போதே மதிப்பளித்தல் - உசனில் சிறப்பு நிகழ்வு


 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.

உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய உணவு பரிமாறவுள்ளனர். அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.

அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

December 18 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இதனை ஒழுங்கு செய்த பழைய மாணவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பழைய மாணவர்களை ஆளாக்கிய ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு நன்றியை நவில்கின்றது.

தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, November 29, 2016

உசன் பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்

1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது தரம் 4 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பொது உளச்சார்பு மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றில் பரீட்சை நடாத்தி பரிசளிப்பு நடத்தியுள்ளனர். இந்த முன்மாதிரியான செயலை அவர்கள் கடந்த வருடம் ஆரம்பித்தனர். தொடர்ந்தும் இந்த ஊக்குவிப்புப் பரீட்சைகளை அவர்கள் நடத்த உள்ளனர். இந்தப் பழைய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட சில படங்கள். நன்றி FaceBook - Usan RMV OldStudents