அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, October 9, 2013

உசன் "விஜய" சகோதர்கள் சாதனை

உசனில் பிறந்து, உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் படித்து, உசனில் பல மாணவர்களுக்குப் படிப்பித்த, இரு ஆசிரியர்கள் இலங்கையில் சிறந்த ஆசிரியருக்கான சிறப்பு அதிஉயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
உசனில் "விஜய" குடும்பத்தைச் சேர்ந்த திரு. திருமதி ஒப்பிலாமணி அவர்களின் புதல்வர்களான திரு. ஒ.விஜயரத்தினம் மற்றும் திரு. ஒ.விஜயதாசன் ஆகியோர், யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் சிறந்த ஆசிரியர்களுக்கான இலங்கையில் அதி உயர் விருதான "பிரதீபா பிரபா" விருதினை 05/10/2013 அன்று பெற்றுக்கொண்டனர். "விஜய" சகோதரர்கள் ஒரே பாடசாலையில் ஒரே விருதைப் பெற்று சாதனை படைத்தனர். இவர்களின் திறமையால் இவர்களைப் பெற்று வளர்த்த கிராமமும், கல்வியூட்டிய உசன் பாடசாலையும் பெருமை கொள்கிறது.

இவர்களின் தந்தையார் திரு. ஒப்பிலாமணி அவர்கள் உசனில் பல மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்த ஆசிரியர் என்பதுடன் "விஜய" சகோதரர்கள் பலரும் ஆசிரிய பணியில் இருப்பது மட்டுமன்றி கடல் கடந்தும் இவர்களின் ஆசிரியப் பணியாக திருமதி. வியஜகுமாரி அவர்கள் கனடாவில் தமிழ் மொழிக்கல்வியை வளர்க்க கனேடிய பாடசாலை கட்டமைப்பில் தமிழ் ஆசிரியாராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் இளைய சகோதரன் வியஜரூபன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை உறுப்பினராக இருந்து அதன் முயற்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை சேர்த்த உசன் "விஜய" சகோதரர்களுக்கு அனைத்துலக வாழ் உசன் மக்கள் சார்பாகவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பாகவும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பணி உசன் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். உங்கள் பணி தொடரவும், இன்னும் பல விருதுகள் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறோம்.