அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, June 4, 2017

வாழ்த்துகிறோம்!


உசன் சனசமூக நிலையக் காப்பாளரும், உசன் கிராம முனேற்றச் சங்கத்தின் தலைவரும், உசன் கிராம முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைப்பவருமாகிய வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்களும், இந்தச் சமூக சேவைக்குப் பக்கபலமாக நிற்கும் அவரின் மனைவி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் அவர்களும் வைத்தியசாலை  நிர்வாக முகாமைத்துவதில் விஞ்ஞான முதுமானி பட்டம் (Master of Science in Management & Administration of Ayurveda Institutions) பெற்றதையிட்டு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உசன் மக்கள் சார்பில் இருவருக்கும்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.





கடந்த மூன்று வருட காலக் கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் அவர்களால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது.  வட பகுதியில் இந்த உயர் கல்வியைத் தொடர வசதி இல்லாத நிலையில் களனி பல்கலைக் கழகத்தில் அவர்கள் இருவரும் இந்த உயர் கல்வியைக் கற்று வந்தனர்.  குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு, அதே நேரத்தில் தம்மை நாடி வரும் நோயாளர்களையம் கவனித்துக்கொண்டு இந்த மைல்கல்லை அவர்கள் அடைந்துள்ளமை ஏனையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.  இந்த மூன்று வருட காலமும் தேவையானபோது தனது பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து நல்வழிப்படுத்தியதோடு, தனது வைத்தியசாலைத் தேவைகளையும் கவனித்துக்கொண்ட தனது தாயாருக்கும் தான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பதாக வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபநாமகணேசன் அவர்கள் தெரிவித்தார்.



Sunday, May 21, 2017

கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களினதும் கோடை கால ஒன்றுகூடல் - 2017'


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களினதும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களினதும்  கோடைகால ஒன்றுகூடல் ஜூலை மாதம் 1 ம் திகதி, சனிக்கிழமை இடம்பெற உள்ளது.  வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த வருடம் சனிக்கிழமையில் நடைபெற நேரம் கூடியுள்ளது.  இதுவரை கலந்துகொள்ள முடியாதவர்கள் இந்த வருட நிகழ்வில் கலந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டமும் இந்த ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் நடைபெறும்.  இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவின் 150 ஆவது பிறந்ததினத்தில், நடைபெறப்போகும் இந்த ஒன்றுகூடலானது, Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இடம்பெறும்.
நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது.

இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "நான் நிர்வாகசபையில் நீண்டகால உறுப்பினராக இருந்தாலும் தலைவர் பொறுப்பில் இருந்து நடத்தும் முதல் கோடை கால ஒன்றுகூடல் இது என்பதால் மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்றால் போல் நிகழ்வு அசத்தலாக இருக்கும்" என நம்பிக்கை வெளியிட்டார்.  கடந்த குளிர்கால ஒன்றுகூடலில் இருந்தது போல சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் எனவும், அதிகளவு உசன் மக்களை  வரவழைக்கும்  பணியில் நிர்வாகசபை உறுப்பினர்கள் அக்கறையுடன் ஈடுபட்டிருப்பதால், அதிகளவு மக்கள் இம்முறை வருவார்கள்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.





Monday, April 24, 2017

மிருசுவில் பங்கின் மூத்தகுரு அருட்பணி குணசீலன் அவர்களுக்கு எமது அஞ்சலி


மிருசுவில் பங்கின் மைந்தரும் மூத்த குருவுமாகிய அருட்பணி குணசீலன் அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் தேவனடி  நேர்ந்துவிட்டார் , அன்னாரின் துயரினால் துயருறும் அனைத்து உறவுகளுக்கும் பங்கு மக்களுக்கும் , எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம் ,
கனடா வாழ் மிருசுவில் பங்குமக்களுக்கு , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா 




Sunday, April 23, 2017

தங்க பதக்கம் வென்ற உசன் வீரன் ..செல்வன்.சி.கோகுலன்


கனடா நாட்டில் வருடாந்தம் நடைபெறும் பூப்பந்து சுற்றுப்போட்டியின் 2017 ம் ஆண்டுக்கான போட்டி கடந்த வாரம் டொரோண்டோ நகரில் நடைபெற்றது , பல பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட நிறைய வீரர்களுடன் மோதி , இறுதியில் வெற்றி தங்க பதக்கத்தை உசனை சேர்ந்த இளம் வீரன் செல்வன்.சிவகுமார் கோகுலன் தனதாக்கினார் ,
கனடாவிலும் சர்வதேச பூப்பந்து போட்டிகளிலும் கோகுலன் கலந்து வெற்றிகளை பெற்றுள்ளார் ,
உசேனை சேர்ந்த திரு ,திருமதி, நவரத்தினம் உமாமகேஸ்வரி அவர்களின் பேரனும் ,திரு.திருமதி . சிவகுமார் அவர்களின் மகனுமான செல்வன் கோகுலன் , பல்கலைக்கழக கல்வியை பயின்று வருவதுடன் , விளையாட்டுதுறையிலும் பல சாதனைகளை படித்த்துவருகிறார் ,
அதனை விட தனது திறமைகளையும் விளையாட்டு நுட்பங்களையும் கனடா வாழ் இளம் சிறுவர்களுக்கு பயிற்சி  வழங்கி வருகிறார் .தந்தையார்
திரு.சிவகுமார் நவரத்தினம் அவர்கள் கனடாவில் பூப்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதுடன்
கனடிய தமிழர் மத்தியில் பூப்பந்து விளையாட்டு துறையை வளர்ப்பதில் கனடிய தமிழர் பூப்பந்து சங்கத்தில் நிர்வாக அங்கத்தவராக செயல்பட்டு வருகிறார் ,
புலம் பெயர்ந்தாலும் வேற்று நாட்டில் உசன் மண்ணின் மைந்தர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வது எமக்கு பெருமை தருகிறது ,
கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
எதிர் வரும் ஜூலை மாதம் கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் பூப்பந்தாட்ட  போட்டியில் கனடா சார்பில் விளையாட தெரிவாகியுள்ளார் ,
கோகுலனுக்கு உசன் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு , எதிர்கால போட்டியில் இன்னும் பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகிறோம் .


Saturday, April 15, 2017

உசன் மைந்தன் திரு.குணசீலன் ஆசிரியர் அவர்களுக்கு கனடாவில் உசன் மக்கள் மதிப்பளித்து கௌரவிப்பு


உசன் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவனும்,  பிரபல உயிரியல் ஆசிரியரும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி  கலாசாலை விரிவுரையாளருமான சின்னத்தம்பி குணசீலன் அவர்களுக்கு, அவரின் மேலான கல்விச் சேவையைப் பாராட்டி கனடா வாழ் உசன் மக்கள் சார்பில் மதிப்பளிப்பும், உசன் மக்களுடனான சந்திப்பும் கனடாவில் நடைபெற்றது.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  தலைவர் சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது இளமைக்கால உசன் வாழ்க்கை அனுபவங்கள், உசன் பாடசாலை அனுபவங்கள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை அவர் உசன் மக்களுடன் பரிமாறினார்.
நீண்ட கால இடைவெளிகளைத் தாண்டி தனது பழையகால உசன் உறவுகளைச் சந்தித்தது தனது தாயை மீண்டும் சந்தித்த உணர்வைத் தருவதாகவும், உசன் மக்களால் வழங்கப்படட இந்த கெளரவம் தனது தாயிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் போல  தான் உணர்வதாகத் தெரிவித்து தனது உணர்வுகளை உசன் மக்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.   திரு. குணசீலன் ஆசிரியர் தனது  உறவினர்கள், நன்றிக்குரிய மூத்தவர்களிடம் இருந்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.



உசன் மக்களையும், தனது வகுப்புத் தோழர்களையும் கண்ட மகிழ்ச்சி அளவில்லாதது எனத் தெரிவித்து தற்போதைய ஈழத்து இளைய கல்விச் சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதை மிகவும் ஆழமாக, அனுபவத் திறனோடு விளங்கப்படுத்தினார்.



அவரைச் சந்திக்க ஆவலோடு வந்திருந்த உசன் மக்களும் தமது இளமைக் கால நினைவுகளை அவரோடு பகிர்ந்துகொண்டனர்.  ஆசிரியருடனான இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.

eKuruvi நிறுவனத்தினரின் வருடாந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட "சமுதாயச் சிற்பி" என்ற விருதைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் கனடா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





.