அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, November 9, 2015

உசன் அறிவியல் "சிற்பி" ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி ...


உசன் பாடசாலையின் வரலாற்றில் மறக்கமுடியா   ஆசானாகவும் ,அதிபராகவும் விளங்கி உசன் கிராம மக்களின் அன்புக்குரிய ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) ஐயா அவர்கள் இன்று (09-11-2015) காலமானார்,
அன்னாரின் காலத்தில் உசன் பாடசாலையில் மாணவர்களின் கல்விவளர்ச்சி மிக அதிகமாக இருந்ததுடன் ,உசன் பாடசாலையின் கீதத்தையும் இயற்றியவர் , கிராம மக்களுடன் அன்பாக பழகியதுடன், தமிழ் மற்றும் இலக்கிய துறையில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தார் ,
சிற்பி ஐயா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சி.சிவசரவணபவன்அவர்களிடம் கல்விகற்ற மாணவர்கள் பலர் தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளனர் ,
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துகொள்வதுடன் 
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்துகொள்கிறோம் . 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும்.

1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ். வைத்தீசுவரக் கல்லூரி என்பவற்றில் புகழ் பூத்த அதிபராக விளங்கினார்.
 ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், சஞ்சிகையாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர்.  பலரை இலக்கியத்துறைக்குள் ஈடுபடுத்தியவர்.
சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது.யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்த ”இந்து சாதனம்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொழிற்பட்டார்
1953 இல் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் கல்விகற்கும் வேளையில் இளந் தமிழன் என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது.
ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
சிற்பி என்ற பெயரிலேயே பல சிறுகதைகளையும் உனக்காக கண்ணே என்ற பிரபல நாவலையும் எழுதிய இவரது முழுப்பெயர் பிரம்மஸ்ரீ  சிவசுப்பிரம்மண்ய ஐயர் சிவசரவணபவன் . தாயார் சௌந்தராம்பாள் ஆவார்.
யாழ்வாசி என்ற புனை பெயரிலும் பல ஆக்கங்களை படைத்த இவர் பல விருதுகளை பெற்றவர். இவர் ஈழத்து சிறுகதை வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் எழுதி வந்தவர்.இறக்கும் போது இவருக்கு வயது 82


Saturday, October 17, 2015

உசனில் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு


இலங்கை நாடாளுமன்றத்தின் அமர்வுகளின் மாதிரியை ,பாடசாலை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுவரும்"மாதிரி நாடாளுமன்ற அமர்வு " உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது , நாடாளுமன்ற அங்கத்தவர் தெரிவு வாக்கெடுப்பு ,வாக்குபதிவு , சத்தியப்பிரமாணம் , கட்சி விவாதம் ,என இலங்கை அரசியல் அமைப்புக்கு  ஏற்ப பல நாடாளுமன்ற செயல்பாடுகளை
இலகுவான முறையில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது .
உசன் மாணவர்கள் இந்த நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டனர் ,
பாடசாலை அதிபர் .திரு.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியில் இந்த நிகழ்வுக்குரிய அனுமதியை கல்வித்திணைக்களம்  உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்துக்கு வழங்கியிருந்தமை பாராட்டுக்குரியது ,







Dr.திருமதி,துஷியந்தி மிகுந்தன் (Professor/ Dean)அவர்களை வாழ்த்துகிறோம் .


உசனை சேர்ந்த திரு.திருமதி .பேரம்பலம் அவர்களின் புதல்வியும் ,உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவியுமான,Dr.திருமதி ,துஸ்யந்தி மிகுந்தன் அவர்கள், விவசாயபீட பேராசிரியராக (Professor)நியமனம்பெற்றதுடன் ,
யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட "பீடாதிபதியாக"( Dean Of Agriculture faculty) பொறுப்பேற்றுள்ளார்.  
திருமதி ,துஸ்யந்தி அவர்கள் ஏற்கனவே கலாநிதி (DR) பட்டம் பெற்றதுடன் தனது திறமை காரணமாக வெளிநாடுகள் பலவற்றுக்கு சென்று சிறப்பு பயிற்சிகளையும் பெற்றதுடன் , நீண்ட காலமாக பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார் .
இவரின் பதவி உயர்வு கண்டு நாம் மகிழ்வு கொள்வதுடன் , கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் வாழ்த்துக்களை நேரடியாக தெரிவிக்க ...
tmikunthan@yahoo.co.in
0094212222404
..




உசன் மாணவர்களின் "இன்னியம்"மரபு இசை குழு

தமிழரின் பாரம்பரிய மரபு கலையாகிய "இன்னியம்" என்னும் கலை காணாமல்  போகும்  நிலையில் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் .இந்த "இன்னியம்" மரபு கலை இசையை மாணவர்கள் மிக கட்சிதமாக வாசிப்பதை காணமுடிகிறது , யாழ் மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இந்த இசை குழுவை காணமுடிகிறது , எமது பாடசாலையும் மரபு கலை இசை கருவிகளை கையாண்டு தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது மகிழ்ச்சி தருகிறது.
இந்த இன்னியம் இசை குழுவை உருவாக்கிய அதிபர்,ஆசிரியர், வாத்திய கலைஞர்கள்,சீருடை அன்பளிப்பு செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்
இங்கே "இன்னியம்" இசை குழு வரவேற்பு இசை முழங்குவதை காணமுடியும் .
 


Monday, October 12, 2015

உசன் முருகனின் "இராஜகோபுர " திருப்பணி ஆரம்பம்

உலகெங்கும் வாழும் உசன் கந்தசுவாமி அடியார்களே!
தெய்வீகம் சுரக்கும் யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேசத்தின் உசன் புண்ணிய பதியில் அருளாட்சி நல்கும் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவஸ்தானத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்று இப்போது ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயங்கர யுத்த சூழலிலும் உசன் கிராமத்துக்கும், மக்களுக்கும் பாதிப்புகளின்றிக் காப்பாற்றி, புலம் பெயர் தேசங்களிலும் உங்களைச் செல்வச் செழிப்போடு காத்தருளும் எம் பெருமான் முருகனுக்குத் தனிச் சிறப்பு மிகு இராஜகோபுரம் அமைக்கும் பணி நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. இப்பொழுது உசன் கிராமத்தில் தலை நிமிர்ந்து அருள்பாலிக்க எம்பெருமானின் அனுக்கிரகம் கைகூடி இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன், ஆலய புனருத்தாரண வேலைகளும், புது பொலிவூட்ட வர்ண பூச்சு வேலைகளும் நடைபெற்று வருகிறன. இந்தியாவிலிருந்து வரவளைக்கப்பட்ட தேர்ச்சி மிக்க ஆச்சாரியர்களால் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
உசன் முகனின் ஆசியுடன் வாழும் உங்களின் பங்களிப்பும் இந்த இராஜகோபுர பணியில் கலந்திட நீங்கள் விருப்பம் கொண்டால் தாராளாமாக இந்த திருப்பணியில் இணைந்து கொள்ள முடியும். உங்களின் கரங்களால் எந்த விதமான காணிக்கை செலுத்தினாலும் அது எம்பெருமானின் புனருத்தாரணப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மிக வேகமாக நடைபெற்று வரும் திருப்பணி பூர்த்தியடைந்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஆசி கூடியுள்ளது. முருகனின் இராஜகோபுரம் உயர்வது போன்று உங்கள் வாழ்க்கையும் உயர எம்பெருமான் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய தர்மகர்த்தாவைத் தொடர்புகொள்ளவும்.
திரு.கு.விமலதாஸ் -0094773474767
Commercial Bank A/C# 8600930636
Chvakachcheri Branch

கனடாவில் இருந்து இத் திருப்பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ள முடியும். சேவைக் கட்டணமின்றி பணம் அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
திருமதி சி.சாந்தினி -905-554-2014