அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, November 30, 2019

பரிசில் நாள் நிகழ்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய பரிசில் நாள் நிகழ்வு November 30 திகதி, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வித்தியாலய முதல்வர் மற்றும் பழைய மாணவர் சங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்த நிகழ்வைச் சாத்தியமாக்கினர்.

வித்தியாலய முதல்வர் க. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலய கல்வி அலுவலகத்தில் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருக்கும் திருமதி சிவத்திரை சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியும், வித்தியாலயத்தின் பழைய மாணவருமான வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இடைவிடாத மழை மற்றும் மின்வெட்டுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசில் நாள் நிகழ்வு சாத்தியமாவதற்குக் காரணமாக இருந்த வித்தியாலய முதல்வர், பழைய மாணவர் சங்கம் மற்றும் நிதி உதவி வழங்கிய நலன்விரும்பிகள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. பரிசு பெற்ற மாணவர்களையும் அது பாராட்டுகிறது.

























Saturday, November 16, 2019

ஐயாத்துரை கனகேஸ்வரி


திருமதி ஐயாத்துரை கனகேஸ்வரி அமரத்துவம் அடைந்துள்ளார்.
இவர் உசன் ஐயாத்துரை (மாத்தையா) அவர்களின் அன்பு துணைவியாராவர்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, October 6, 2019

தென்மராட்சி கலை விழா


தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடா நடாத்தும் "தென்மராட்சி கலை விழா" சனிக்கிழமை, October 26, 2019 அன்று இடம்பெற உள்ளது.

2017 ஆம் ஆண்டு பிரதேச முன்னேற்றம் குறித்து கரிசனை கொண்ட சிலரால் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  கனடாவில் இயங்கி வரும் தென்மராட்சி சார்ந்த ஏனைய அமைப்புகளோடும் கை கோர்த்து பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். அதன் முதற்படியாக மாணவர்களின் முன்னேற்றமே பிரதேசத்தின் முன்னேற்றம் என்ற கருத்துக்கமைய மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.

தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - கனடாவை தென்மராட்சி மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த "தென்மராட்சி கலை விழா" ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  தென்மராட்சிக் கலைஞர்களின் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் உள்ளடக்கப்ட்டுள்ளன. உசன் கலைஞன் அஜந்தன் அவர்களின் கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிறுவனத் தலைவர் V. S. துரைராஜா அவர்கள் அண்மையில் தென்மராட்சி சென்று தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் - இலங்கை என்ற நிறுவனத்தைப் புதுப்பித்திருந்தார். அங்கு எடுக்கப்படவிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த நிறுவனமே நிர்வகிக்கும். அதன் செயலாளரும், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் அதிபருமான நடராஜா சர்வேஸ்வரன் அவர்கள் "தென்மராட்சி கலை விழா"வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார். அங்கு எடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை இந் நிகழ்வில் அவர் பரிமாறிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இந்த நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அந்தப் பிரதேசத்து கனடா வாழ் மக்கள் அனைவரினதும் கடைமையாகும்.  அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு உசன் மக்கள் அனைவரையும், மற்றும் கனடா வாழ் தென்மராட்சி மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு கேட்டுக்கொள்கிறது.

இடம்: கனடா கந்தசாமி கோவில் மண்டபம்
733 Birchmount Road, Scarborough, M1K 1R5, ON.
திகதி: October 26, 2019, சனிக்கிழமை
நேரம்: மாலை 6:30 மணி.

நிகழ்வின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுமுகமாக நுழைவுக் கட்டணமாக $10.00 எதிர்பார்க்கப்படுகிறது.

வாருங்கள், முழு ஒத்துழைப்பு வழங்கி "தென்மராட்சி கலை விழா"வை வெற்றியடையச் செய்வோம்!


Thursday, October 3, 2019

பரத தர்சனம்

Luzern, Switzerland பரததர்சனா நடனாலயத்தின் "பரத தர்சனம்" நடன நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை, October 6, 2019 அன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அதன் அதிபர் காயத்திரி திஷாந்தன் அனைவரையும், குறிப்பாக உசன் மக்களை, அன்போடு அழைக்கிறார்.

இது 15ஆவது ஆண்டு விழாவாக இடம்பெறவிருக்கிறது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் உணர்வாளரும், ஊடகவியலாளருமான அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் கலந்து சிறப்பிக்கிறார்.


நடன ஆசிரியர் காயத்திரி இலங்கையில் நடன ஆசிரியர்களான திருமதி ராஜகுமாரி மற்றும் திருமதி சுபித்ரா ஆகியோரிடம் ஆரம்ப நடனக் கலையைக் கற்றுக்கொண்டார். இதன் பயனாக க. பொ. த. உயர் தரத்தில் விசேட சித்தி பெற்றார்.  பின்னர் இந்தியாவில் அடையார் இசைக் கல்லூரியில் முறைப்படி நடனக் கலையை கற்று தேர்ந்து "ஆடற் கலைமணி" மற்றும் "நாட்டிய விஷாதாரா" ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்று முதலாம் தரத்தில் சித்திபெற்றார். பின்னர் அடையார் K. லக்ஷ்மன் மற்றும் அவரது சகோதரி நாகமணி ஆகியோரிடம் பயின்று அரங்கேற்றம் கண்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக Switzerland இல் Luzern மாநிலத்தில் நடனக் கலையைக் கற்பித்து வருகிறார்.  ஆரம்பத்தில் ஒரேயொரு மாணவியோடு ஆரம்பித்து இன்று 50 மாணவிகளோடு ரத தர்சனா என்ற நடனப் பள்ளியை சிறப்பாக நடாத்தி வருகிறார்.  Switzerland நாட்டில் அனைத்துலக தமிழ் லை நிர்வாகத்தினர் நடத்திவரும் பரீட்சைகளில் மாணவர்களை தரம் 5 வரை சித்தியடைய இவர் ஊக்குவித்து வருவதோடு "நாடிய மயில்" போட்டிகளிலும் பங்குபற்றி பாராட்டுதல்களைப் பெற்று வருகிறார்.

இவர் உசன் ரஞ்சிதமலர் வெற்றிவேலு தம்பதிகளின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.


நடன ஆசிரியர் காயத்திரிக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற  தனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.


Saturday, September 14, 2019

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை கூட்டம்


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் .நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் . புதிய நிர்வாகசபையின் முதலாவது கூட்டம் டொரொன்டோடாவில் நடைபெற்றது. இதில் தொடர்ந்தும் திரு.சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் . தொடர்ந்து தலைவர் திரு.சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையின் கீழ் ஏனைய உறுப்பினர்களின் பதவி பொறுப்புகள் தெரிவுசெய்யப்பட்ட்துடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது . தொடர்ந்தும் இந்த சங்கம் சிறப்பாக இயங்க அனைத்து உசன் மக்களையும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒத்துழைப்பையும் நிர்வாகசபை வேண்டி நிக்கிறது